அசுரன் சாதி வன்மத்தை கேள்விகேட்கும் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு !

நாங்குநேரி தொகுதியில் நேற்று இரவு வரை காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். திடீரென்று கட்சி நிர்வாகிகளை அழைத்த அவர், நடிகர் தனு‌‌ஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்புவதாக கூறினார். உடனடியாக கட்சி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். படத்தின் இரவு 2- வது காட்சிக்கு சென்றார். அந்த படத்தை கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து அவர் ரசித்து பார்த்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஜெகன் உள்ளிட்டோர் இருந்தனர். படத்தை பார்த்துவிட்டு ஸ்டாலின் தனுஷையும் படக்குழுவையும் வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள் என ட்விட் செய்துள்ளார்.