அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிற ஜி.வி.பிரகாஷின் படங்கள்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து`சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும், நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மைன்ட் ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் சார்பாக லதா மேனன் தயாரிப்பில் இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுமட்டுமின்றி படம் முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காமன்மேன் பிரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக, மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இம்மாத இறுதியில் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.