அதிரடி ஆக்க்ஷன் நிறைந்த போலீஸ் வேடத்தில் துல்கர் சல்மான்

ஒவ்வொரு கதாநாயகனையும் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமரச் செய்வது, அடிதடியும், அதிரடியும் நிறைந்த கமர்சியல் படங்கள்தான். அதிலும் கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடித்து கமர்சியலாக உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். அப்படி ஒரு அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே, ஒவ்வொரு கதாநாயகனின் ஆர்வமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மலையாள சினிமாவைப் பொறுத்தவரை, இளம் நடிகர்களான நிவின்பாலி, பகத்பாசில், டொவினோ தாமஸ் போன்றவர்கள் கூட அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால் துல்கர் சல்மான் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில நடிக்கவே இல்லை. ‘விக்கிர மாதித்யன்’ என்ற படத்தில் போலீஸ் வேலை தேடுபவராக மட்டுமே நடித்திருந்தார். துல்கர் சல்மானுக்கு இதுவரை சரிவர அமையாமல் இருந்த போலீஸ் கதாபாத்திர குறையை, இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தீர்த்து வைத்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘மும்பை போலீஸ்’ என்ற படத்தை ஏற்கனவே இயக்கிய அனுபவம் உள்ளவா். ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, காயம்குளம் கொச்சுண்ணி’ என அதிரிபுதிரியான வெற்றிப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில்தான், துல்கர் சல்மான் முழு நீள போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.