அமெரிக்க திரைப்பட விழாவில் காலா, பரியேறும் பெருமாள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23, 24-ந் தேதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது. தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கின்றன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன. காலா படத்தை இயக்கிய ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தார். இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கவுரவம் வழங்கியுள்ளது.