அரசியலிலிருந்து விலகப்போவதில்லை – விஜயசாந்தி திட்டவட்ட அறிவிப்பு !

வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்ற போலீஸ் படத்தில் அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜயசாந்தி. பின்னர் ஆந்திர அரசியலுக்குள் நுழைந்தார். அங்கும் கலக்கியவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகேஷ் பாபு நடிக்கும் சரிலேரு நீக்கவேரு படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு வந்துள்ளார். சமீபத்தில் நிருபர்களை சந்தித்த அவர்,  மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது பதட்டமாக இருந்தேன். இந்த 13 ஆண்டுகளில் சினிமா ரொம்பவே மாறிவிட்டது. எனக்கு நிறைய வி‌ஷயங்கள் புதிதாக இருந்தன. கிட்டத்தட்ட பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தை போலவே உணர்ந்தேன். 2006-ம் ஆண்டு நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தேன். அதன் பின்னர் அரசியல் பணி, மக்கள் பணியில் முழுதாக ஈடுபட சென்று விட்டேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் இயக்குனர் சில ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒரு படத்துக்காக கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால் இந்த கதையை கேட்டதும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது. தேர்தலுக்கு பின்னர் நேரமும் கிடைத்ததால் ஒப்புக்கொண்டேன். மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் நடித்து இருக்கிறேன். அவர் மகனுடன் தற்போது நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒருமுறை அவருடன் நடித்துள்ளேன். அதுபற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டேன், அடுத்து எந்த படத்திலேயும் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவில் நடிப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அரசியலையும் மக்கள் பணியையும் கைவிட மாட்டேன்.