அரசியல் கட்சிக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ராகவா லாரன்ஸ். அத்துடன் சமூக அக்கறையுடன் பல சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு லாரன்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை! இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும். மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும், செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்போது எல்லை மீறுகிறது. அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் பதிவிடுகிறார்கள். அது எனக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. உங்களுடைய அந்த தொண்டர்களை அழைத்து கண்டிப்பாக இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் படி கூறுங்கள். இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தால், எச்சரிக்கை தான். அந்த எச்சரிக்கை என்னவென்றால், எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ. முன்பு நடனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்திலுமே நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன். அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத் தான் இருக்கிறேன், அதில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். இது தேர்தல் நேரம். இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை. தயவுசெய்து எங்களது மன உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.