ஆடை படத்தில் நடித்ததை வைத்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை ஏற்கமாட்டேன் – அமலா பால் !
ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததை வைத்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை ஏற்கமாட்டேன். சமூக வலைத்தளத்தில் ஆபாச படங்கள் நிறைய உள்ளன. ஆடை படத்தை பார்த்து ஒருவர் தவறான பாதைக்கு செல்கிறார் என்றால் அவர் சைக்கோவாகத்தான் இருக்க முடியும். இந்த படத்தில் நல்ல விஷயங்கள் உள்ளன. சொந்த காலில் நின்று சாதிக்க துடிக்கும் பெண்ணாக நடித்து இருக்கிறேன். விவாகரத்து எனது சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை. டைரக்டர் விஜய் இனிமையானவர். திருமணம் செய்துகொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். எங்கள் திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தன. திருமணமானபோது எனக்கு 23 வயது. சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. இருவரும் சமூகத்தில் பிரபலமானவர்கள். எனவே வாழ்க்கை எங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றது. நண்பர்களாக இருந்த நிறைய பேர் என்னை விட்டு விலகினார்கள், எதிரியை போல் பார்த்தனர். அதன் பிறகு இமயமலை சென்றேன் அங்கு கிடைத்ததை சாப்பிட்டேன். மலைப்பகுதியில் தரையில் படுத்தேன், அந்த பயணம் என் வாழ்க்கையை மாற்றியது. இப்போது வாழ்க்கையில் நிறைய முதிர்ச்சியும் பக்குவமும் ஏற்பட்டு உள்ளது. சாதாரண பெண்ணாக வாழவே விரும்புகிறேன். நான் வாங்கிய விலை உயர்ந்த காரையும் விற்றுவிட்டேன். திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்படவில்லை. திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கவும் ஆசை உள்ளது இவ்வாறு அமலாபால் கூறினார்.