ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் இரு கதாநாயகிகளுடன் ஜோடி சேரும் புதிய படம் !

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன், பேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.