இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே செல்வமணி வெற்றி

இயக்குநர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, பின்னர் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கட்டிடத்தில், நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகின. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்றார். பதிவான வாக்குகளில் 17 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டன. துணைத் தலைவர்கள் பதவிக்கானத் தேர்தலில், கே.எஸ்.ரவிக்குமார், 1,289 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். மற்றொரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ரவிமரியா 1077 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.வி உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பேரரசுவும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.