இயக்குனர் ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் மனக்கசப்பா?

இயக்குனர் ஷங்கர் தனது முதல் படமாக ஜென்டில்மேன் இயக்கியதிலிருந்தே அவரது பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். இதற்கிடையில் ஷங்கர் இயக்கிய நண்பன், அந்நியன் ஆகிய 2 படங்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த 2.0 படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2ம் பாகம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் ஷங்கர். முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கும் அவர்தான் இசை அமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்படத்துக்கு அனிரூத் இசை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ஷங்கர், ரஹ்மானுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதால் இசை அமைப்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார் என சிலர் பேசி வருகின்றனர். இதுகுறித்து இருவருமே  பதில் அளிக்காத நிலையில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இணையதள பக்கத்தில் ஷங்கருக்கு ரஹ்மான் தெரிவித்துள்ள வாழ்த்து மெசேஜில்,'மற்றொரு பிளாக் பஸ்டர் படத்தை வழங்க இந்தியன் 2 பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குட் லக் நண்பா’ என குறிப்பிட்டிருக்கிறார்.