இறைவனைப் பயன்படுத்தி மக்களைச் சந்தித்தவன் ராஜராஜன் – கவிஞர் வைரமுத்து !

தமிழ் நிலத்துக்கு வெளியே தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தவன் ராஜராஜ சோழன். அவன் காலத்தோடு அவனைப் புரிந்துகொள்வதுதான் ராஜராஜ சோழனுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தீபம் ஏற்ற வருகிறார்கள் மக்கள். அவர்களிடம் ராஜராஜன், 'தீபம் ஏற்ற வேண்டுமென்றால் நெய் வேண்டும். அந்த நெய்யை நீங்கள் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக 100, 200 என ஆடுகளைக் கொடுங்கள். உங்கள் விளக்கு எரியும்' என்கிறார். ஆடுகள் கொடுக்கப்பட்டன. ராஜராஜன் அந்த ஆடுகளை திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு மேய்ச்சலுக்குக் கொடுக்கிறார். அதன்மூலம் வரும் பலனை அவர்களையே அனுபவித்துக்கொள்ளச் சொல்கிறார். 'விளக்கு எரிவதற்கு மட்டும் நெய் கொடுத்துவிடு' என விவசாயிகளிடம் சொல்லிவிடுகிறார். கோயிலில் விளக்கும் எரிந்தது, ஏழைகள் வீட்டில் அடுப்பும் எரிந்தது. இறைவனைப் பயன்படுத்தி மக்களைச் சந்தித்தவன் ராஜராஜன். இந்தப் பெருமைகளை எல்லாம் நாம் மறந்துவிடலாமா. குறைகளை நாம் நிகழ்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது பெருங்குறையாகத்தான் தெரியும். காலத்தின் கண்கொண்டு பார்க்க வேண்டும். ராஜராஜன் என்கிற மாமன்னனை நாங்கள் கொண்டாடுவோம், போற்றுவோம்.