இளையராஜா 75′ விழா -சென்னை வந்துசேர்ந்த சர்வதேச சிம்பொனி இசைக்குழு!

ஆயிரம் படங்களுக்குமேல் இசையமைத்தவர் இளையராஜா. அவரைக் கௌரவிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 'இளையராஜா 75' விழா, பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட இருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இளையராஜாவின் 75 -வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையிலும், அவருக்கு மரியாதைசெலுத்தும் விதமாகவும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கும் இரண்டு நாள் விழாவில், முதல் நாள் நடனக் கலை நிகழ்ச்சிகளும், இரண்டாம் நாள் இளையராஜா தனது பாடல்களை ரசிகர்களுக்கு நேரடி இன்னிசை நிகழ்ச்சியாக வழங்கவுள்ளார். இதில் பங்கேற்க ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட்டைச் சேர்ந்த சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழு நேற்று இரவு சென்னையை வந்தடைந்தது. ஏற்கெனவே, இளையராஜாவின் பல நிகழ்ச்சிகளில் வாசித்துள்ள இக்குழுவின் வருகை, நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பம்சமாய் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2-ம் தேதி இவ்விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கிவைத்து, 'இளையராஜா 75' என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.