உலகப்புகழ் பெற்ற இயக்குனரின் திரைப்படம் தமிழில் தயாராகிறது

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித், 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக் (Baduk) என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர். தற்போது இயக்கிவரும் “பியாண்ட் த க்ளவுட்ஸ்” என்ற படம் தமிழிலும் தயாராகிறது. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து Children of Heaven, The Color Of Paradise, Baran, Muhammad The Messenger of God ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் அறிவார்ந்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்த படைப்பாளி. இவர் தற்போது Beyond The Clouds என்ற பெயரில் ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் மஜித் மஜிதி. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் இந்த படம், தமிழிலும் தயாராகிறது. ஒரே சமயத்தில் மும்மொழி (தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம்) களில் தயாராகி வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். இதில் ஹிந்தியின் முன்னணி நடிகரான ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் கதையின் நாயகனாகவும், மாளவிகா மோகனன் என்ற மலையாள தேசத்து மங்கை கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான ஜி வி சாரதா நடிக்கிறார். இப்படம் அண்ணன் தங்கை இடையேயான உறவை மையப்படுத்திய கதையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.