எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிறது – ராதிகா ஆப்தே!

தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும் லண்டனை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:- “நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும். நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவது உண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை. சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம். நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட சொன்னது இல்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.