எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார் !

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது. இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன். இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயமோகன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஜெயமோகன் வடசேரி காவல்நிலையத்தில் மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது புகார் அளித்துள்ளார். போலீசார், மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.