எவரது உதவியையும் நாடாமல் தனி ஒருவனாக நிற்கும் சசிகுமார்

சசிகுமார் இயக்கி, நடித்த 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் ஒரு டபுள் ஹீரோ கதை. ஒரு ஹீரோ ஜெய்க்கு சுவாதியுடன் காதலும் உண்டு, காதல் பாட்டும் உண்டு. இன்னொரு ஹீரோவான சசிகுமாருக்குக் காதலியும் இல்லை, பாட்டும் கிடையாது. இந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சின்னத்திரையில் சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த சமுத்திரக்கனியை தனது தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க வைத்தார். பிறகு, அவரைத் தன் தயாரிப்பில் 'நாடோடிகள்' படத்தை இயக்கவைத்தும் அழகு பார்த்தார். அதற்குப் பிறகு, பாண்டிராஜ் சொன்ன கதையைக் கேட்டு, 'பசங்க' படத்தைத் தயாரித்து பல விருதுகளை அள்ளினார். 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் ஆனது. எப்போது சொந்தமாகத் தயாரித்து, நடிக்க ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து சசிகுமார் கடன்சூழ வாழ ஆரம்பித்தார். பைனான்ஸியர் அன்புச் செழியனிடம் வாங்கிய கடனுக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, 'கம்பெனி புரொடக்‌ஷன்' நிர்வாகியும், சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் தற்கொலை சசிகுமாரை ரொம்பவே பாதித்தது. அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமானவர்களை சும்மா விடமாட்டேன்' என்று சாவு வீட்டில் வசனம் பேசியவர்கள் எல்லாம் கல்லறை காயும் முன்பே காணாமல் போய்விட்டார்கள். ஏற்கெனவே ஒரு பெரிய பைனான்ஸியரிடம் வாங்கிய 30 கோடிக்கும் அதிகமான கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவரும் முயற்சியில் போராடிக்கொண்டிருக்கிறார், சசிகுமார். இப்போது ஒரு படத்துக்கு சசிகுமார் வாங்கும் சம்பளம் 3 1/2 கோடி ரூபாய். தற்போது, 8 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சசிகுமார் நினைத்திருந்தால், அவரால் சினிமாவில் ரீ-என்ட்ரியான விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்கவைத்து, 'நம்மவீட்டுப் பிள்ளை' படத்தின் இயக்குநர் பாண்டிராஜை இயக்க வைத்து, ஒரே படத்தில் 40 கோடி ரூபாய் பிசினஸ் செய்து, ஒரேநாளில் எல்லாக் கடனையும் அடைத்துவிட்டு, நிம்மதியாக வலம் வரலாம்.  சசிகுமாரின் 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனத்தால் பட்டைதீட்டப்பட்ட கலைஞர்கள் இன்று உச்சாணிக் கொம்பில் இருந்தாலும், அவர்கள் யாரிடமும் எந்தவிதமான உதவியும் கேட்காமல், சுயமாக நின்று ஜெயிக்கப் போராடிக்கொண்டிருக்கிறார், சசிகுமார்.