ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை – இயக்குனர் அமீர்!
மதுரை அமெரிக்கன் கல்லூரி காட்சித்தொடர்பியல் துறை சார்பாக கலைப் போட்டிகள் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவை இயக்குநர் அமீர் தொடங்கி வைத்தார் அப்போது அவர் மேடையில் பேசுகையில், 'நான் சினிமாவை வெளியே இருந்து பார்த்ததற்கும், சினிமா துறைக்கு வந்ததற்குப் பிறகு பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதேபோல் தான் எல்லா துறைகளிலும் இதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். நமக்கான அடையாளங்களையும், திறமைகளையும் அறிந்து நாம் தான் செயல்பட வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை யாரும் இயக்க மாட்டார்கள் நாம் தான் தொடர்ந்து செயல்பட வேண்டும். தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைவாக உள்ளதாக எண்ணுகிறேன். எனவே, அதை போக்க மண் சார்ந்து மக்கள் சார்ந்து அதிக படங்களை எடுக்க முயற்சி செய்வேன். ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு நாட்டமில்லை. அப்படி நான் விரும்பி சற்று வேறு மாதிரி எடுக்க வேண்டும் என எடுத்த படம் தான் ராம். அது 2 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது. வடசென்னை ராஜன் போல் எல்லாருடைய மனங்களிலும் நிற்க ஆசைப்படுகிறேன். கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு சுதந்திரமான வாழ்க்கை. அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அரசியல் கூட பேசி தெரிந்துகொள்ள வேண்டும் பிறரின் பிரச்னைகளை உணர வேண்டும்” என்றார்.