கதை திருட்டு வழக்கில் சூர்யாவின் காப்பான் படத்திற்கு தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் !

பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மோகன்லால், நடிகை சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘காப்பான்’. இந்த படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தை தயாரித்துள்ள ‘லைகா’ நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மனுதாரர் கூறும் ‘சரவெடி’ படத்தின் கதை வேறு, ‘காப்பான்’ படத்தின் கதை வேறு என்று கூறியிருந்தது. இதேபோல் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,'என்னிடம் கதை சொன்னதாக கூறிய மனுதாரரை நான் பார்த்ததே இல்லை. எப்போதும் அடையாளம் தெரியாதவர்களிடம் நான் கதை கேட்க மாட்டேன். எனவே, இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கவேண்டும். வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்‘ என்று கூறியிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’ என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.