கந்து வட்டி கும்பலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை- நடிகர் கருணாகரன் திட்டவட்டம்!

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 'பொதுநலன் கருதி' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை சீயோன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு கருணாகரன் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது கருணாகரன் வரவில்லை. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன், ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்சினைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுகிறார் என்றார். இது குறித்து நடிகர் கருணாகரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார் அதில், 'பொது நலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை படத்தில் உயிரைப் பணயம் வைத்து சில காட்சிகளில் நடித்துள்ளேன். கந்து வட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை, நான் அப்படி வளரவும் இல்லை. நான் வேண்டுமென்றே படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு வரவில்லை என்கிறார்கள், அதிலும் உண்மையில்லை இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.