கமலின் சர்ச்சை பேச்சு:கஸ்தூரி, காயத்ரி ரகுராம் கருத்து !

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் நாதுராம் கோட்சே பற்றி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், கமல்ஹாசனின் பல சிந்தனைகளுக்கு நான் ஆதரவு. ஆனாலும் கூட்டத்தை திருப்திபடுத்தும் அவரது பேச்சுக்கு ஆதரவு கொடுப்பது இல்லை. பெயர்களை வைத்து பேசி அரசியல் செய்யும் நிலைக்கு அவர் இறங்கிவிட்டது வருத்தமாக உள்ளது. மதரீதியாக திருப்திபடுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்து மதத்தை குறிப்பிட்டு வேறு மதத்தினர் வசிக்கும் பகுதியில் கமல்ஹாசன் பேசியது ஏன்? இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்த வேண்டாம். முதுகில் குத்துபவர்கள் பலர் உள்ளனர். அவர்களை நான் தீவிரவாதிகள் என்று கூற முடியுமா? காங்கிரஸ் பல ஆண்டுகளாக இந்தியாவின் முதுகில் குத்தி உள்ளது. அந்த கட்சியை தீவிரவாதி என்று கூறலாமா? இதுபோன்ற பேச்சுக்களை விடுத்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.