கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு – சித்தார்த் !

கரோனா அச்சம் குறைந்து கூடிய விரைவில் பழைய நிலைக்குத் திரும்புவோம் என்று சித்தார்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சம் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு. கரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கையை சோப்புப் போட்டுக் கழுவுங்கள். யாருடனும் நெருங்கிப் பழகாதீர்கள். கொஞ்ச நாளைக்கு கை கொடுப்பது, கட்டிப் பிடிப்பதைக் குறைக்கலாம். கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். இதெல்லாம் செய்தாலும் ரொம்ப பயப்படுகிற நிலை என்று எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் இன்னும் கரோனா வைரஸ் அந்த அளவுக்கு வரவில்லை. தமிழக அரசும் அவர்கள் நிலையிலிருந்து என்ன பண்ண வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கூடிய விரைவில் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்புவோம் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.