காப்பான் படக்குழுவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு !

காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் காப்பான் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய விவசாய உற்பத்தியில் மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக் கொள்ளி மருந்துகள் பயன்பாட்டை கைவிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயார் செய்வது மற்றும் பயன்படுத்துவதின் அவசியத்தை காப்பான் படம் உணர்த்துகிறது. இந்திய விவசாயிகளின் பெருமையையும், உணவு உற்பத்தியின் தேவையையும் வெளிப்படுத்தும் உயரிய லட்சியத்துடன் இப்படம் வெளிவந்துள்ளது. காவிரி டெல்டாவைக் காக்க வந்த திரைப்படம், காப்பான். விவசாயிகளின் ஒற்றுமையையும் போர் குணத்தையும் ஊக்கப்படுத்தும் காப்பான் திரைப்படத்தை ஒவ்வொரு தமிழனும் கண்டுகளிக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுமிக்க திரைப்படத்தின் கதாநாயகன் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம் என்று கூறினார். இந்நிலையில் காப்பான் படக் கதாநாயகன் சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் பி.ஆர். பாண்டியன். விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.