காற்றின் தரம் குறித்த தரவுகள் தரும் பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் – ஐஸ்வர்யா ராய் முதலீடு!

சினிமா பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பகுதியை முதலீடு செய்கிறார்கள். பாலிவுட் பிரபலங்களில் மிக முக்கியமானவர், ஐஸ்வர்யா ராய். அவர், சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'Ambee' என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.  இந்நிறுவனம், தனது விரிவாக்கப் பணிக்காக 3.22 கோடி ரூபாய் தேவை என்பதையும், முதலீடுசெய்ய நினைப்பவர்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்பதையும் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.  இதனைத் தொடர்ந்து, தன் பெயரில் 50 லட்சம் ரூபாயையும், தன் தாயார் விருந்தா.கே.ஆர் பெயரில் 50 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. கடந்த 2017-ம் ஆண்டில், அக்‌ஷய் ஜோஷி, மதுசூதன் ஆனந்த், ஜெய்தீப் சிங் என்பவர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், டெவெலப்பர்கள், நுகர்வோர், சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு காற்றின் தரம் குறித்த தரவை வழங்குகிறது. பாலிவுட் பிரபலங்களில், தீபிகா படுகோன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற பலரும் ஐஸ்வர்யா ராய் போலவே முதலீடு செய்வதில் அதிக ஆர்வம்காட்டிவருகிறார்கள்.