காவல்துறையின் செயலிகளை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யுங்கள் – இளைஞர்களுக்கு சமுத்திரக்கனி வேண்டுதல் !

மதுரை மாநகர காவல்துறை சார்பாக அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ‘வெல்வோம்’ என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். நடிகர் சமுத்திரகனி பேசியதாவது:- ‘ஏழரை கோடி மக்கள் உள்ள நாட்டில் ஒன்றரை லட்சம் காவலர்கள் மட்டுமே உள்ளனர். எல்லாவற்றுக்குமே காவலர்கள் வர வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும். இளைஞர்கள் எதை எதையோ பதிவிறக்கம் செய்வதை விடுத்து காவல்துறை செயலிகளை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். ஒரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன். ஆனால் நம்முடைய காவல்துறை தினம் தினம் அதனை அனுபவிக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.