கிரிக்கெட் படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள்!

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983-ல் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இதனை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். அந்த அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும், சந்தீப் பட்டிலாக அவரது மகன் சீரங்கும் நடிக்கின்றனர். மேலும் பங்கஜ் திரிபாதி, சாஹில் கட்டார், சஹீப் சலீம், தாஹிர் ராஜ் பாசின் உள்பட பலர் நடிக்கின்றனர். கபீர் கான் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு மும்பை கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் சாந்து கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். உதவி இயக்குனர் என்ற முறையில் அமியா இதனை கவனித்து கொள்கிறார். சந்தீப் பட்டீல் மகன் சீரங் கூறும்போது, எனது தந்தையும், அமியா தந்தை கபில்தேவும் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்தவர்கள். படப்பிடிப்புக்கான தினசரி வேலைகளை அமியா ஒருங்கிணைத்து வருகிறார். படம் சம்பந்தமான தகவல்களையும் அவர்தான் எங்களுக்கு தெரிவிக்கிறார் என்றார்.