குஷ்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் பறிமுதல் !

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமூக, அரசியல் விஷயங்கள் குறித்து வலைத்தளத்தில் அதிகம் பேசி வருகிறார். இதனால் வரும் விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொள்கிறார். நடிகர் சங்க தேர்தலிலும் விஷாலின் பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு முடிவை எதிர்பார்த்து இருக்கிறார். இந்த நிலையில் தனது வீட்டின் முன்னால் பல நாட்களாக கேட்பாரற்று நின்ற நம்பர் பிளேட் இல்லாத வாகனம் பற்றி போலீசார் கவனத்துக்கு கொண்டு சென்றார். குஷ்பு வீடு சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கிறது. அவர் வீட்டின் அருகில் இந்த வாகனத்தை யாரோ நிறுத்தி வைத்துள்ளனர். வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் நம்பர் பிளேட் இல்லை. கடந்த 10 நாட்களாக அதே இடத்திலேயே வாகனம் நின்றுள்ளது. அந்த வாகனத்தை குஷ்பு படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த கன்டெய்னர் கடந்த 10 நாட்களாக எங்கள் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. யாரும் அதை கண்டுகொள்ளவும் இல்லை. புகார் செய்யவும் இல்லை. வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாதது சந்தேகத்தை கிளப்புகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். குஷ்பு கொடுத்த புகாரின் பேரில் போக்கு வரத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். மறுநாளே நம்பர் பிளேட் இல்லாத அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தகவல் கொடுத்த குஷ்புவுக்கு நன்றி தெரிவித்த போலீசார், போக்குவரத்து போலீசாரின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.