கெளதம் இயக்கும் ஜெயலலிதா வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரம் இல்லை !

ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் குழந்தை பருவம், இளமை பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல் அமைச்சராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி படத்துக்கு ‘குயின்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார். ஜெயலலிதாவாக இதில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா, சோபன்பாபு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார். ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது போயஸ் கார்டன் வேதா இல்லம் பழைய மாடலில் இருந்தது. இப்போது நவீனமயமாக இருப்பதால் அதேபோன்று பழைமை மாறாத தோற்றம் கொண்ட பங்களா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள கார்டனில் இருக்கிறது. ஜெயலலிதா இளமை தோற்றத்தில் நடிக்கும் காட்சிகளை ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்து இருக்கிறார். முக்கியமாக சசிகலா கதாபாத்திரம் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள்.