கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்- கமல்ஹாசன்!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை-கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட கூட்டாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், ஷயானின் மனைவி மற்றும் குழந்தை வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினர். கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் உயிர் இழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்கள் பெரும் சந்தேகங்களை கிளப்பின. இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் இணைந்து கடந்த 11-ந் தேதி டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி குற்றம் சாட்டப்பட்டிருந்தது.தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என கூறினார்.