‘கோமாளி’யை இந்தியில் தயாரிக்கும் போனி கபூர்

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கோமாளி’ திரைப்படத்தை இந்தி மொழியிலும் எடுக்க உள்ளனர். அண்மையில் வெளியான இந்தப்   படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர்  நடித்திருந்தனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இப்படத்தின் இந்தி உள்ளிட்ட பிறமொழி மறுபதிப்பு உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கி உள்ளார். இவர் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தார். தற்போது இந்தியில் ‘மைதான்’ படத்தைத் தயாரிப்பதுடன் இரு தமிழ் படங்களையும் தயாரிக்க உள்ளார். ‘கோமாளி’ இந்தி மறுபதிப்பில்   தனது மகன் அர்ஜூன் கபூரை நடிக்கவைக்க போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.  இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. தெலுங்கு, கன்னடத்தில் மறுபதிப்பு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.