சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யாபாலன்

பெங்களூருவை சேர்ந்த சகுந்தலா தேவி மனித கம்ப்யூட்டர் என்று புகழ் பெற்றவர். சிக்கலான கணக்குகளுக்கு சில நொடிகளில் தீர்வு சொன்னார். பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால் உடனே அதன் கிழமையை சொல்லும் அசாத்திய திறமை அவருக்கு இருந்தது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார். 2013–ம் ஆண்டு தனது 83–வது வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. சகுந்தலா தேவி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாரான த டர்டி பிக்சர் படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளார். சகுந்தலா தேவி வாழ்க்கை படத்தில் நடிக்கும் வித்யாபாலனின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் தலைமுடியின் நீளத்தை குறைத்து சகுந்தலா தேவி போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்த படத்தை கேரளாவை சேர்ந்த அனுமோகன் இயக்குகிறார்.