சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் 2 பெண்கள் அத்துமீறி நுழைதல்
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 வயதிற்குக் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சபரிமலை கோவிலிற்குள் அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வருடம் செப்டம்பரில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு, கோவிலிற்குள் செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, இந்து மத அமைப்புகளும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் செல்ல மனிதி அமைப்பினை சேர்ந்த 11 பெண்கள் முற்பட்டனர். பக்தர்களின் எதிர்ப்பினால் அவர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில், 50 வயதிற்குக் கீழ் உள்ள இரு பெண்கள் 18 படிகள் ஏறி அதிகாலை 3.45 மணியளவில் அத்துமீறி தரிசனம் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்டு எம்.எல். அமைப்பினை சேர்ந்த பிந்து – வயது 42 என்றும் மற்றொருவர் கனகதுர்கா – வயது 44 என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு சபரிமலை தேவஸ்தானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது