சரத்குமார், ராதிகாவுடன் விஷால் திடீர் சந்திப்பு !

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. சரத்குமார் தலைவராக இருந்தபோது வேறுவிதமான ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை விற்றுவிட்டதாக காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால். 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் காவல் துறையினர் விரைந்து செயல்படவில்லை, கிடப்பில் போட்டுவிட்டனர் என்று சென்ற ஆண்டு உயர் நீதிமன்றத்தில் விஷால் மனுத்தாக்கல் செய்திருந்தார். சரத்குமார், ராதாரவி இருவர் மீதுள்ள குற்றம் குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. 'சரத்குமார், ராதாரவி மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இருவரையும் நீக்குகிறோம்' என்று நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமீபத்தில் சரத்குமார், ராதிகாவை விஷால் திடீரென சந்தித்துப் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கடலோரத்தில் அமைந்துள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் சரத்குமார், ராதிகா, விஷால் மூவரும் மதிய உணவு வேளையில் சந்தித்து விருந்து சாப்பிட்டனர். அதன்பின் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் சரத்குமார், ராதிகா, விஷால் மூவரும் சந்தித்துப் பேசியது குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.