சாலையை கடந்தவர் மீது நான் காரை ஏற்றவில்லை? நடிகை ராஷ்மி கவுதம் விளக்கம்!
தமிழில் கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், தவ்லத் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷ்மி கவுதம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு காரில் கன்சுவாகா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கம்புடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற சையத் அப்துல் மீது மோதியது. ராஷ்மி கவுதம் வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சொகுசு காரை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு ராஷ்மி கவுதம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் காரில் வந்தபோது சாலையில் விளக்கு இல்லை. அப்போது சையத் அப்துல் வேகமாக ஓடி வந்து சாலையை கடந்ததால் அவர் மீது கார் மோதிவிட்டது. நான் காரை ஓட்டவில்லை, டிரைவர்தான் ஓட்டி வந்தார். அந்த கார் எனக்கு சொந்தமானது இல்லை. இந்த விபத்துக்கு சையத் அப்துல்தான் காரணம். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். போலீசார் விசாரித்து டிரைவரை கைது செய்தனர். விபத்து நடந்தபோது அந்த பகுதியில் சிலர் கூடி செல்பி மற்றும் வீடியோ எடுத்து மோசமாக நடந்து கொண்டது வருத்தமாக இருந்தது. இவ்வாறு ராஷ்மி கவுதம் கூறினார்.