சாஹோ பட ஹீரோயின் ஷ்ரத்தா கபூர் கொட்டும் மழையில் போராட்டம் !

அமேசான் காடுகளில் தீ பரவி வருவது குறித்து உலக அளவில் நடிகர், நடிகைகள் கவலை தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது கவலையை இணைய தள பக்கம் மூலமே தெரிவித்துள்ளதால் அவர்களின் கவலையை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இன்னமும் அமேசான் காடுகள் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் உள்ளூர் காட்டில் 3000 மரங்கள் வெட்டி வீழ்த்தப்படவிருப்பதை எதிர்த்து ரோடுக்கு வந்து போராடினார் சாஹோ பட ஹீரோயின் ஷ்ரத்தா கபூர். மும்பையில் ஆரே வனப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதைக்காக 3000 ஆயிரம் மரங்கள் வெட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதையறிந்து இயற்கை ஆர்வலர்கள் மரங்களை வெட்டக்கூடாது என்று போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் நடிகை ஷ்ரத்தா கபூர் கைகோர்த்தார். ஆரே வனப்பகுதியை காப்பாற்றுங்கள் என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்து போராட்டத்தில் குதித்தார் ஷ்ரத்தா. அப்போது கடுமையான மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும் போராட்டத்தை கைவிடாமல் குடை பிடித்தபடி போராட்டம் நடத்தினார்.