சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி

ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் குருசூரியா. வினோதமான நோய் தாக்கப்பட்டதால் குருசூரியா படுத்த படுக்கையாகி விட்டான். இந்த நிலையில் குருலட்சுமியின் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். குருலட்சுமியின் தம்பி வெங்கடேசன் தனது அக்கா மற்றும் அக்காவின் மகனுக்காக திருமண வாழ்வை தியாகம் செய்து அவர்களை காப்பாற்ற போராடி வருகிறார். மிகவும் ஏழ்மையினால் அவர்களால் குருசூரியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை சந்தித்தால் தேவையான மருத்துவ உதவிகிடைக்கும் என்று சொன்னதை கேட்டு 3 பேரும் சென்னை புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களால் ராகவா லாரன்ஸ் முகவரியை கண்டு பிடித்து அவரை சந்திக்க முடியவிலலை. இதனால் எதுவும் புரியாமல் தவித்த அவர்கள் 3 பேரும் எழும்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கடந்த சிலதினங்களாக தங்கி இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராகவா லாரன்ஸ் உடனடியாக அவர்களுக்கு உதவ முன் வந்தார். படவேலைகளில் மும்முரமாக இருந்தும் இன்று காலையில் முதல் வேலையாக தனது உதவியாளரை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு காரில் அனுப்பி குருலட்சுமியும், வெங்கடேசனையும் சந்தித்து ராகவா லாரன்ஸ் உங்களை அழைத்துவர கூறினார். அதைகேட்டதும் அவர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வடித்தனர். எங்களால் முடியும் என்றால் அறக்கட்டளை மூலமாகவே அனைத்து உதவிகளும் செய்து சிகிச்சை அளிக்கப்படும். எங்களால் முடியாத அளவுக்கு இருந்தால் அரசை அணுகுவோம் இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.