சூர்யா, விஜய், அஜித்தை தொடர்ந்து தனுஷும் பேனர் வைக்க வைக்கவேண்டாம் – ரசிகர்களிடம் அறிவுறுத்தல் !

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு பேனர் கலாசாரத்தை ஒழிக்க குரல்கள் ஒலிக்கின்றன. அரசியல் கட்சிகள் பேனர்களை தவிர்க்கும்படி தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன. இதேபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா, அஜித் ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்தனர். விஜய் வேண்டுகோளை ஏற்று சென்னையில் சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பேனர் வைக்கவில்லை. அஜித்குமார் ரசிகர்களும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டினர். இந்த நிலையில் தனுஷூம் தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். தனுஷ் வேண்டுகோளை ஏற்று அவரது ரசிகர் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனுஷ் நடிப்பில் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்துக்கு கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.