டிசெம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு !

இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு அதிக நடிகர்-நடிகைகள் நடிக்கும் படமாக பொன்னியின் செல்வன் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது பெரிய பழுவேட்டரையர் வேடத்துக்கு பார்த்திபன், சுந்தர சோழனாக சரத்குமார், ராஜராஜனாக அதர்வா, குந்தவையாக அனுஷ்கா, வானதியாக ராஷிகன்னா ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியையும் படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அவரிடம் தேதி இல்லாததால் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஐஸ்வர்யாராய் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. மணிரத்னம் படத்தில் பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.