டைரக்டர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி !

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமானை ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ‘செக்க சிவந்த வானம்’ படம் திரைக்கு வந்தது. தற்போது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான நடிகர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் மணிரத்னத்துக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மணிரத்னம் வயிற்றுக் கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், சிகிச்சை முடிந்து விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.