தனி கட்சி தொடங்கவிருக்கிறார் பிரகாஷ் ராஜ்

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் தனது கன்னத்தில் பலமான அடி விழுந்துள்ளது என்றார். அடுத்த கட்டமாக தனி கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டி வருமாறு, பெங்களூரு முழுவதும் கடந்த 6 மாதங்களாக பயணம் செய்து மக்களை சந்தித்தேன். அவர்கள் பிரச்சினைகளை கேட்டு அறிந்தேன். அதற்கு தீர்வு காண குரல் கொடுத்தேன். போலியான தேசப்பக்தியையும் வெறுப்பையும் வளர்த்த அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனாலும் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து விட்டனர். மக்கள் முடிவை ஏற்கிறேன். எனது கொள்கைகள் நிறைவேற தொடர்ந்து உழைப்பேன். பெங்களூரு மக்கள் உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன். சுயேச்சையாக நின்றதால் மக்களுடன் இடைவெளி ஏற்பட்டதாக தெரிவித்தனர். எனவே விரைவில் தனியாக அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளேன். இன்னும் ஒரு வருடத்தில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அரசியல் கட்சியை நடத்த பணம் தேவை என்பதால் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் செய்வேன் இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.