தனுஷின் ஹாலிவுட் படம் மே 14-ல் தொடக்கம்

தனுஷ் நடிப்பதற்கு கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இருப்பினும் ‘ப.பாண்டி’ என்ற படத்தை இயக்கி, அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில், அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ்.வேலையில்லா பட்டதாரி-2 பாகத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆயத்தமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 14-ந் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து ரோம், பாரீஸ் என பல நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இப்படத்தின் கதை பிரபல ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து உருவாகவிருக்கிறது.

கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் என்பவர் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் சிஜோ என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பகிர் எனும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.