தமிழக பிரச்னைகளை குறும்படமாக திரையிட்ட கமல்ஹாசன்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிக்பாஸ் போல் குறும்படம் ஒன்றை பிரமாண்ட எல்.இ.டி. திரையில் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் களமிறங்கும் கமல்ஹாசன், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு நவீன கருவிகள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல், ரேசன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படும், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிக்பாஸ் போல் குறும்படம் ஒன்றை பிரமாண்ட எல்.இ.டி. திரையில் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.