தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் கவலைக்கிடம் !

முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1978-ம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'நிமிர்', Mr. சந்திரமெளலி, சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் புகழேந்தி எனும் நான் படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார். இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. மேலும், அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.