தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா!

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். இளையராஜா-75 நிகழ்ச்சி நடக்கவிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பார்த்திபன் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், அதற்கான காரணத்தை பற்றியும் பார்த்திபன் எதுவும் சொல்லவில்லை.