தவறான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு 3 ஆண்டு சிறை
திரைப்பட நட்சத்திரங்களுக்கு சினிமாவைவிட விளம்பரங்களில் அதிகம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிப்பது என்பது மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால்தான். “இதுக்கு நான் கியாரண்டி” என்று அவர்கள் கூறும்போது அந்த நடிகர், நடிகை ரொம்ப நல்லவர் அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஏற்கெனவே மேகி நூடுல்ஸ் விளம்பர படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு அது தடைசெயயப்பட்டபோது சிக்கல் வந்தது.அதேபோல் ஈமு கோழி வளர்ப்பு மோசடி நடந்தபோது அதன் விளம்பரத்தில் நடித்தவர்கள் எப்படியோ தப்பித்தார்கள். இப்படி பல நிகழ்வுகள் உண்டு.
தற்போது புதிய சட்டம் பற்றி விவாதித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நுகர்பொருள் தொடர்பான தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறும்போது நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் தோன்றும் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம். வெளிநாடுகளில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். தவறான விளம்பரங்களில் தோன்றுகிறவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், வாழ்நாள் தடையும் விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.