துருவ் ஜோடியாகும் ஜான்வி கபூர்- மீண்டும் வர்மா படப்பிடிப்பு துவக்கம்!

வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் பாலா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு” என்று கூறினார். அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. திரைத்துறை வரலாற்றில் முழு படமும் எடுத்து ரிலீஸ் ஆகாமல் திரும்பவும் அதே படத்தை எடுப்பது இதுவே முதல் முறை, இதனால் படத்தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் இருந்தாலும் படத்தை திரும்ப எடுக்கும் முயற்சிக்கு ஒரு பாராட்டு. புதிய வர்மா படத்தை இயக்கும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வர்மா படத்தில் மேகா சவுத்திரி கதாநாயகியாக நடித்து இருந்தார். அவரை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.