துருவ் விக்ரமுக்கு தந்தையாக நடிக்கும் கெளதம் வாசுதேவ் மேனன்!

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்துக்கு வர்மா என்று தலைப்பிடப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டது. பின்னர் வேறு ஓர் இயக்குனரை வைத்து முழு படத்தையும் புதிதாக உருவாக்கப் போவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்தப் படத்துக்கு ஆதித்ய வர்மா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கிரீசாயா இயக்குகிறார், கதாநாயகன் துருவ் விக்ரமை தவிர ஒட்டுமொத்த படக்குழுவையும் மாற்றியுள்ளனர். இந்தப் படத்தில் துருவ் விக்ரமின் தந்தையாக யார் நடிப்பதென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், துருவ் விக்ரமுக்கு தந்தையாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு பணிகளில் விரைவில் கவுதம் மேனன் இணைய உள்ளார். படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். துருவ் விக்ரமின் நண்பர் வேடத்தில் அன்புதாசன் நடிக்கிறார்.