தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் – நமீதாவின் கணவர் விளக்கம்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சேலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர். அதில் நடிகை நமீதா அவரது கணவருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனையிட முயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை நமீதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் என்னை சோதிக்க பெண் போலீஸ் வந்தால் மட்டுமே சோதனைக்கு அனுமதிக்க முடியும் என்று நமீதா தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை நமீதாவின் கணவர், பின்னர் சேலம் – ஏற்காடு பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எங்களது வாகனத்தை நிறுத்தி கடுமையாக பேசினர். கிரிமினல்கள் போல் எங்களை நடத்தினர். எனது மனைவி பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதாக கூறியும் அதிகாரி ஒருவர் பின்பக்க கதவைத் திறந்தார். ஆனால் காரை சோதனை செய்தார். எனது மனைவியின் ஹேண்ட் பேக்கை சோதனை செய்ய வேண்டும் என்றார். ஹேண்ட் பேக்கை சோதனையிட வேண்டுமென்றால் பெண் போலீசை கூப்பிடுங்கள். சில பெர்சனல் பொருட்களை அதில் வைத்திருக்கிறேன் என்றார். இதுதான் விஷயம். ஆனால் இதை ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள். நமீதா ஒரு நடிகை என்பதால் இது ஒரு பெரிய விஷயமாக்கப்படுகிறது.