நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி – சந்தானம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இங்க என்ன சொல்லுது,’ ‘இனிமே இப்படித்தான்,’ ‘சக்கப்போடு போடு ராஜா,’ ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது சந்தானம் நடிப்பில் ‘தில்லுக்கு துட்டு 2’, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் ‘தில்லுக்கு துட்டு 2’ வருகிற 7-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், சந்தானம் அளித்த பேட்டியில் கூறியதாவது,‘‘பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.  ஸ்ரீதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எங்கள் இருவருடன் மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர் மாஸ்டர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படம் சென்னை மற்றும் கேரளாவில் வளர்ந்து இருக்கிறது. நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி.” இவ்வாறு சந்தானம் கூறினார்.