நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கலைநிகழ்ச்சி – நடிகர் கார்த்தி தகவல்!

நடிகர் சங்க கட்டிட நிதி வசூலுக்காக நட்சத்திர கலைநிகழ்ச்சி நடத்த உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார். நடிகர் கார்த்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. பார்க்கிங், அடித்தளம், மேல்தளம், கட்டிடத்தின் பின்பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. முன்பகுதியில் கட்டுமான பணி நடக்கிறது. செலவு ரூ.30 கோடியை தாண்டி உள்ளது. மேலும் பணம் தேவை எனவே கட்டிட நிதி வசூலுக்காக நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் கோவில் மாதிரி சில நடிகர்கள் சேர்ந்து கட்டும் கட்டிடமாக இருக்காமல் சரோஜாதேவி முதல் இப்போதுள்ள நடிகர்-நடிகைகள் வரை அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக கலைநிகழ்ச்சியை நடத்த உள்ளோம். மேலும் இன்றைக்கு வெளியாகவுள்ள 'தேவ்' படம் பற்றியும் கூறியதாவது ரஜத் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘தேவ்’ படம் திரைக்கு வருகிறது. இது காதல் படம். பணம் முக்கியம் இல்லை. உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும். நிறைய அனுபவங்கள் சேகரிக்க வேண்டும் என்று விரும்புகிற இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். அப்பா வளர்த்த பையன், அம்மா வளர்த்த பெண்ணின் உறவுகளை வெளிப்படுத்தும் காதல் படமாக இருந்தாலும் ஒரு இடத்தில் சிக்காமல் நிறைய இடங்களுக்கு பயணிப்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கதை எங்கும் நிற்காமல் தாண்டி போய்க்கொண்டே இருக்கும் தெலுங்கிலும் படம் வெளியாகிறது. இவ்வாறு கார்த்தி கூறினார்.