நடிகர் ரித்தீஷ் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம் !

நடிகரும், முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷ்(46) நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ரித்தீஷின் உடலுக்கு அமைச்சர் மணிகண்டன், நடிகர் கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பரமக்குடி வட்டம் நயினார்கோவில் அருகே உள்ள சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்த ரித்தீஷின் மனைவி ஜோதி, மகன்கள் ஹாரிக் ரோஷன்(11), ஜெய்ரிக்(9), மகள் தானவி(10) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் ரித்தீஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ராதா ரவி, சின்னி ஜெயந்த், ஆர்.ஜெ.பாலாஜி, ரமணா, மயில்சாமி, சூரி, இயக்குநர் மனோ பாலா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் துணை நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர். காமெடி நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோர் ரித்திஷ் உடல் அருகே கதறி அழுதவாறு இருந்தனர். துணை நடிகர் சங்கத் தலைவர் அலாவுதீன் கூறும்போது, நடிகர் சங்கத்துக்காக உழைத்து தற்போதுள்ள சங்க நிர்வாகிகள் வெற்றி பெறப் பாடுபட்டவர் ரித்தீஷ். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் வராதது கண்டிக்கத்தக்கது என்றார்.